தொன்மையான மொழி

முதலாவது செம்மொழித் தகுதியைப் பெறுவதற்கு ஒரு மொழி தொன்மையான மொழியாக இருக்க வேண்டும். தமிழ் தொன்மையான உலக மொழிகளில் ஒன்று. தற்காலத்தைய ஏனைய இந்திய மொழிகளைவிட தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடியதான மிகத்தொன்மையான நூலாகிய தொல்காப்பியத்தின் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இதைப் பழங்கால கல்வெட்டுப் பொறிப்புகளும் உறுதிசெய்கின்றன. 

தொன்மையான தமிழ் மொழியின் மாபெரும் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் கி. மு. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் எழுந்த முதல் சமயம்சாரா பெரும் கவிதை இலக்கியமாக இச்சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. வடமொழியில் காளிதாசரின் இலக்கியங்கள் தோன்றுவதற்கு இருநூறு வருடங்களுக்கு முன்பே சங்க இலக்கியங்கள் தோற்றம்பெற்றுவிட்டன. 
ஏறத்தாழ 1900 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குலகில் டிராயன் என்பவனது ஆட்சிக்காலத்தில் உரோமாபுரிப் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தபோது – கிழக்கில் பசிபிக் சமுத்திரத்திலிருந்து காஸ்பியன் கடல்வரை – அட்லாஸ் மலைகளிலிருந்து இமாலயத் தொடர் வரை சீனப்பேரரசு எழுந்து சிறந்தபோது, தமிழில் ஆழ்ந்த கருத்தமைந்த அழகான கவிதைகள் சிறந்த – உயர்ந்த இலக்கியத் தகுதிகளோடு பாடப்பட்டுள்ளன. தமிழில் எழுத்து வடிவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. வடமொழிக் கல்வெட்டுக்களைவிட தமிழ் மொழிக் கல்வெட்டுக்கள் மிகப்பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் எழுத்து வடிவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

கிரேக்க – உரோமானிய இலக்கியத்தின் இதிகாச காலம், சீனத்தின் உன்னத நேரம், போலவே சங்க காலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்படுகின்றது. "500 கோடி ஆண்டுகளுக்கு முன் கதிரவனிலிருந்து சுழன்று சிதறிய கனல் பிழம்பு, நீள்வட்டப்பாதையில் சுழன்று, சுழற்சி விசையினால் குளிர்ந்து இறுகி உருண்டு, திரண்டு உலகமானது. குளிர்ந்த பூமியின் நடுப்பகுதி உயிர்வாழத் தகுதிபெறும். இலெமூரியா எனப்படும் குமரிக்கண்டம். அங்கு முதலில் தோன்றிய பூமி இலெமூரியா. அதில் முதல் மனிதன் தமிழன். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் என தமிழின் தொன்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார். 

வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் ஃகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூல மொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். சிந்துவெளி அகழ்வாய்வின் தந்தை எனப்படும் கீராசு  பாதிரியார்,"ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட ஒரே மொழி தமிழ். ஏன் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழ் பேசப்பட்டு வந்தது எனக் குறிப்பிடுகின்றார்.