நூலகம்


நல்வழி-ஔவையார்

கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா 


புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.
2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.
4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.
6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து .
9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்
11

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது.
11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு,
12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்.
13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.
14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.
16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.
18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.
19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.
21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
23

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.
24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.
29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி .
30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.
31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.
34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.
37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
40

கொன்றைவேந்தன்-ஔவையார்

கடவுள் வாழ்த்து 
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை 
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. 

உயிர் வருக்கம் 
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. 
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர். 
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. 
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். 
8. ஏவா மக்கள் மூவா மருந்து. 
9. ஐயம் புகினும் செய்வன செய். 
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு. 
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். 
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. 

ககர வருக்கம் 14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை. 
15. காவல்தானே பாவையர்க்கு அழகு. 
16. கிட்டாதாயின் வெட்டென மற. 
17. கீழோர் ஆயினும் தாழ உரை. 
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. 
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். 
20. கெடுவது செய்யின் விடுவது கருமம். 
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. 
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. 
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி. 
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. 
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை. 

சகர வருக்கம் 26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை. 
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. 
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. 
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. 
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். 
31. சூதும் வாதும் வேதனை செய்யும். 
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும். 
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு. 
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண். 
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். 
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். 

தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. 
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. 
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. 
40. தீராக் கோபம் போராய் முடியும். 
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. 
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும். 
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும். 
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. 
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. 
47. தோழனோடும் ஏழைமை பேசேல். 

நகர வருக்கம் 48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும். 
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. 
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை. 
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. 
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. 
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. 
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. 
55. நேரா நோன்பு சீராகாது. 
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். 
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர். 
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை. 

பகர வருக்கம் 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். 
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். 
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும். 
62. பீரம் பேணி பாரம் தாங்கும். 
63. புலையும் கொலையும் களவும் தவிர். 
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். 
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். 
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். 
67. பையச் சென்றால் வையம் தாங்கும். 
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். 
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல். 

மகர வருக்கம் 70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். 
71. மாரி அல்லது காரியம் இல்லை. 
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. 
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. 
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். 
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். 
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. 
77. மேழிச் செல்வம் கோழை படாது. 
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு. 
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். 
80. மோனம் என்பது ஞான வரம்பு. 

வகர வருக்கம் 81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். 
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும். 
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். 
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும். 
85. உரவோர் என்கை இரவாது இருத்தல். 
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. 
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. 
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை. 
89. வைகல் தோறும் தெய்வம் தொழு. 
90. ஒத்த இடத்து நித்திரை கொள். 
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

ஆத்திசூடி-ஔவையார்

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு. 

2. ஆறுவது சினம். 
3. இயல்வது கரவேல். 
4. ஈவது விலக்கேல். 
5. உடையது விளம்பேல். 
6. ஊக்கமது கைவிடேல். 
7. எண் எழுத்து இகழேல். 
8. ஏற்பது இகழ்ச்சி. 
9. ஐயம் இட்டு உண். 
10. ஒப்புரவு ஒழுகு. 
11. ஓதுவது ஒழியேல். 
12. ஔவியம் பேசேல். 
13. அஃகம் சுருக்கேல். 
உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல். 
15. ஙப் போல் வளை. 
16. சனி நீராடு. 
17. ஞயம்பட உரை. 
18. இடம்பட வீடு எடேல். 
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண். 
21. நன்றி மறவேல். 
22. பருவத்தே பயிர் செய். 
23. மண் பறித்து உண்ணேல். 
24. இயல்பு அலாதன செய்யேல். 
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில். 
27. வஞ்சகம் பேசேல். 
28. அழகு அலாதன செய்யேல். 
29. இளமையில் கல். 
30. அரனை மறவேல். 
31. அனந்தல் ஆடேல்.
ககர வருக்கம்
32. கடிவது மற. 
33. காப்பது விரதம். 
34. கிழமைப்பட வாழ். 
35. கீழ்மை அகற்று. 
36. குணமது கைவிடேல். 
37. கூடிப் பிரியேல். 
38. கெடுப்பது ஒழி. 
39. கேள்வி முயல். 
40. கைவினை கரவேல். 
41. கொள்ளை விரும்பேல். 
42. கோதாட்டு ஒழி. 
43. கௌவை அகற்று. 
சகர வருக்கம் 
44. சக்கர நெறி நில். 
45. சான்றோர் இனத்து இரு. 
46. சித்திரம் பேசேல். 
47. சீர்மை மறவேல். 
48. சுளிக்கச் சொல்லேல். 
49. சூது விரும்பேல். 
50. செய்வன திருந்தச் செய். 
51. சேரிடம் அறிந்து சேர். 
52. சையெனத் திரியேல். 
53. சொற் சோர்வு படேல். 
54. சோம்பித் திரியேல். 
தகர வருக்கம் 
55. தக்கோன் எனத் திரி. 
56. தானமது விரும்பு. 
57. திருமாலுக்கு அடிமை செய். 
58. தீவினை அகற்று. 
59. துன்பத்திற்கு இடம் கொடேல். 
60. தூக்கி வினை செய். 
61. தெய்வம் இகழேல். 
62. தேசத்தோடு ஒட்டி வாழ். 
63. தையல் சொல் கேளேல். 
64. தொன்மை மறவேல். 
65. தோற்பன தொடரேல். 
நகர வருக்கம் 66. நன்மை கடைப்பிடி. 
67. நாடு ஒப்பன செய். 
68. நிலையில் பிரியேல். 
69. நீர் விளையாடேல். 
70. நுண்மை நுகரேல். 
71. நூல் பல கல். 
72. நெற்பயிர் விளைவு செய். 
73. நேர்பட ஒழுகு. 
74. நைவினை நணுகேல். 
75. நொய்ய உரையேல். 
76. நோய்க்கு இடம் கொடேல். 
பகர வருக்கம் 77. பழிப்பன பகரேல். 
78. பாம்பொடு பழகேல். 
79. பிழைபடச் சொல்லேல். 
80. பீடு பெற நில். 
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ். 
82. பூமி திருத்தி உண். 
83. பெரியாரைத் துணைக் கொள். 
84. பேதைமை அகற்று. 
85. பையலோடு இணங்கேல். 
86. பொருள்தனைப் போற்றி வாழ். 
87. போர்த் தொழில் புரியேல். 
மகர வருக்கம் 88. மனம் தடுமாறேல். 
89. மாற்றானுக்கு இடம் கொடேல். 
90. மிகைபடச் சொல்லேல். 
91. மீதூண் விரும்பேல். 
92. முனைமுகத்து நில்லேல். 
93. மூர்க்கரோடு இணங்கேல். 
94. மெல்லி நல்லாள் தோள்சேர். 
95. மேன்மக்கள் சொல் கேள். 
96. மை விழியார் மனை அகல். 
97. மொழிவது அற மொழி. 
98. மோகத்தை முனி. 
வகர வருக்கம் 99. வல்லமை பேசேல். 
100. வாது முற்கூறேல். 
101. வித்தை விரும்பு. 
102. வீடு பெற நில். 
103. உத்தமனாய் இரு. 
104. ஊருடன் கூடி வாழ். 
105. வெட்டெனப் பேசேல். 
106. வேண்டி வினை செயேல். 
107. வைகறைத் துயில் எழு. 
108. ஒன்னாரைத் தேறேல். 
109. ஓரம் சொல்லேல். 


உலக நீதி: உலகநாதர்
1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
2
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
3
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
4
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
5
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
6
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே
7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
8
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

9

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
10
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே
11
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே
12
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
13
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே


இன்னா நாற்பது-கபிலர்

கடவுள் வாழ்த்து
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையையுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு. 
பொற்பன வெள்ளியை மன்றப்பின்னாது


01. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
   தந்தையில் லாத புதல்வ னழகின்னா
   அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
   மந்திரம் வாயா விடின்
   ஊணின்னாது

02.பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
  ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
  பாத்தில் புநடைவை யுடையின்னா வாங்கின்னா
  காப்பாற்றா வேந்த னுலகு.
  உடையின்னாது

03.கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
   நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
   கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
   தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

04.எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
  கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
  திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
  பெருவலியார்க் கின்னா செயல். 

05.சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
   உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
   முறையின்றி யாளு மரசின்னா வின்னா
   மறையின்றிச் செய்யும் வினை.
   புரைசேர்

06.அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
   மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
   இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
   கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.
   கடு மொழியின்னா 

07.ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
   நாற்ற மிலாத மலரி னழகின்னா
   தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
   மாற்ற மறியா னுரை.

08.பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
   நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
   இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
   நயமின் மனத்தவர் நட்பு.

09.கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
   வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
   வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
   பண்ணில் புரவி பரிப்பு.

10.பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
   இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
   அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
   பொருளில்லார் வண்மை புரிவு.

11.உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@
  இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா
  இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
  கடனுடையார் காணப் புகல்.
  மனைவி தொழி லின்னா

12.தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
  வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
  புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
  முலையிள்ளாள் பெண்மை விழைவு.

13.மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
  துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
  பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
  பிணியன்னார் வாழு மனை.

14.வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
  துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
  புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
  உணர்வா ருணராக் கடை.
  வணரொளி

15.புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
  கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
  இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா
  பல்லாரு ணாணப் படல்.
  விழைவின்னா

16.உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
  நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
  கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
  எண்ணிலான் செய்யுங் கணக்கு.

17.ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
  மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
  நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
  ஈன்றாளை யோம்பா விடல்.

18.உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
  மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
  சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
  மனவறி யாளர் தொடர்பு. 
  அகம்வறியாளர்

19.குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
  நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
  நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
  கலத்தல் குலமில் வழி.

20.மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
  வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
  மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
  மூரி யெருத்தா லுழவு.

21.ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
  பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
  மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
  ஒத்திலாப் பார்ப்பா னுரை.

22.யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
  ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
  தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
  கான்யாறிடையிட்ட வூர்.
  கானாறு

23.சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
  துறையிருந் தாடை கழுவுத லின்னா
  அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
  நிறையில்லான் கொண்ட தவம்.
  அறைபறை யாயவர்

24.ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
  தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா
  காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
  யாமென் பவரொடு நட்பு.
  உயிர்க்கின்னாது

25.நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
  ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
  கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
  நட்ட கவற்றினாற் சூது.
  இடுக்க ணனிகண்டா னன்கின்னா
  கண்டாற் பெரிதின்னா

26.பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
  அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
  பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
  பெரியோர்க்குத் தீய செயல்.

27.பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
  கிழமை யுடையார்க்களைந்திடுத லின்னா
  வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
  இளமையுண் மூப்புப் புகல்.
  கிழமை யுடையாரை

28.கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
  வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
  இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
  கல்லாதான் கோட்டி கொளல்.

29.குறியறியான் மாநாகமாட்டுவித்த லின்னா
  தறியறியானீரின் பாய்ந்தாடலின்னா
  அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
  செறிவிலான் கேட்ட மறை.
  மானாகம் இன்னா தறிவறியான்
  கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்

30.நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
  கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
  ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
  கடும்புலி வாழு மதர்.
  நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா

31.பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
  எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
  மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
  தண்மை யிலாளர்பகை.
  எண்ணறிய மாந்தர் தன்மையிலாளர்

32.தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
  முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
  நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
  தொன்மை யுடையார் கெடல்.

33.கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
  முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
  வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
  கள்ள மனத்தார் தொடர்பு.
  நடக்கி னனியின்னா

34.ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
  விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
  இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
  கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.
  ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்
  விழித்தகுநூலும்

35.எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
  குழலி னினியமரத் தோசைநன் கின்னா
  குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
  அழகுடையான் பேதை யெனல்.
  குழலினிய

36.பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
  நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
  வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
  கெடுமிடங் கைவிடுவார் நட்பு.

37.நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
  துறையறியா னீரிழிந்துபோகுத லின்னா
  அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
  சிறியார்மேற் செற்றங் கொளல்.
  துறையறியா நீரிழிந்து

38.பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
  மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
  வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
  திறனிலான் செய்யும் வினை.

39.கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
  கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
  கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
  மடுத்துழிப் பாடா விடல்.

40.அடக்க முடையவன் மீளிமை யின்னா
  துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
  அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
  அடக்க வடங்காதார் சொல்.



இனியவை நாற்ப்பது-கபிலர்

கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

01.பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
   நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
   முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
   தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

02.உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
   மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
   நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
   தலையாகத் தான்இனிது நன்கு. 

03.ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
   நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
   ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
   தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 

04.யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
   ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
   கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
   மான முடையார் மதிப்பு. 

05.கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
   செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
   எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
   பொல்லாங் குரையாமை நன்கு. 

06.ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
   பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
   வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
   காப்படையக் கோடல் இனிது. 

07.அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
   பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
   தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
   கொண்டடையா னாகல் இனிது. 

08.ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
   தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
   கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
   ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
   பேதுறார் கேட்டல் இனிது 

09.தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
   அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
   பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
   அன்புடைய ராதல் இனிது. 

10.கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
   நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
   மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
   எனைமாண்புந் தான்இனிது நன்கு. 

11.அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
   குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
   உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
   பெருமைபோற் பீடுடையது இல். 

12.குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
   சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
   மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
   திருவுந்தீர் வின்றேல் இனிது. 

13.மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
  தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
  ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
  மானிடவர்க் கெல்லாம் இனிது. 

14.குழவி தளர்நடை காண்டல் இனிதே
  அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
  வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
  மனனஞ்சான் ஆகல் இனிது. 

15.பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
  வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
  மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
  மதமுழக்கங் கேட்டல் இனிது. 

16.சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
  மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
  எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
  எத்துணையும் ஆற்ற இனிது. 

17.நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
  ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
  பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
  மெய்த்துணையுஞ் சேரல் இனிது.

18.மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
  தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
  எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் 
  கண்டெழுதல் காலை இனிது. 

19.நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
   பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
   முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
   தக்குழி ஈதல் இனிது. 

20.சலவாரைச் சாரா விடுதல் இனிதே
   புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
   மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
   தகுதியால் வாழ்தல் இனிது. 

21.பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
   அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
   மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
   திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 

22.வருவா யறிந்து வழங்கல் இனிதே
   ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
   பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
   திரிபின்றி வாழ்தல் இனிது.

23.காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
   ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
   பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
   சூதரைச் சோர்தல் இனிது. 23

24.வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
   ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
   இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
   செய்வது செய்தல் இனிது. 

25.ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
   கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
   நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
   புல்லா விடுதல் இனிது. 

26.நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
   உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
   எத்திறத் தானும் இயைவ கரவாத
   பற்றினின் பாங்கினியது இல். 

27.தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
   மானம் படவரின் வாழாமை முன்இனிதே
   ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
   கோள்முறையாற் கோடல் இனிது. 27

28.ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
   கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
   ஆக்க மழியினும் அல்லவை கூறாத
   தேர்ச்சியின் தேர்வினியது இல். 

29.கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
   உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
   எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
   ஒளிபட வாழ்தல் இனிது. 

30.நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
   மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
   அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
   நன்றியின் நன்கினியது இல். 

31.அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
  கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
  சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
  அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 

32.சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
   பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
   தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
   பத்திமையிற் பாங்கினியது இல். 

33.ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
  தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
  வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
  தானை தடுத்தல் இனிது. 

34.எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
  சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
  புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
  கொள்ளர் விடுதல் இனிது. 

35.ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
   முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
   பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
   வெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 
   வெற்றல் வேல்

36.அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
   செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
   கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
   வவ்வார் விடுதல் இனிது. 

37.இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
   கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
   தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
   விடமென் றுணர்தல் இனிது. 

38.சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
  நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
  எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
 சுற்றா உடையான் விருந்து. 

39.பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
  துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
  உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
  ஒற்கம் இலாமை இனிது. 

40.பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
  வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
  பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
  கற்றலிற் காழினியது இல்.


ஆசாரக்கோவை-பெருவாயின்முள்ளியார்

001.ஆசார வித்து 
   (பஃறொடை வெண்பா)
   நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
   இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
   ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
   நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
   சொல்லிய ஆசார வித்து

002.ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் 
   (இன்னிசை வெண்பா)
   பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
   நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
   இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
   ஒழக்கம் பிழையா தவர்.

003.தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
   (இன்னிசை சிந்தியல் வெண்பா)
   தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
   முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
   எப்பாலும் ஆகா கெடும்.

004.முந்தையோர் கண்ட நெறி
   (இன்னிசை வெண்பா)
   வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
   நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
   தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
   முந்தையோர் கண்ட முறை.

005.எச்சிலுடன் தீண்டத் தகாதவை
   (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
   எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
   உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
   திட்பத்தால் தீண்டாப் பொருள். 


006.எச்சிலுடன் காணக் கூடாதவை
   (இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
   எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
   தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
   நன்கறிவார் நாளும் விரைந்து.

007.எச்சில்கள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
   இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
   விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

008.எச்சிலுடன் செய்யக் கூடாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
   ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
   மேதைகள் ஆகுறு வார்.

009.காலையில் கடவுளை வணங்குக
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
   தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
   நின்று தொழுதல் பழி.

010.நீராட வேண்டிய சமயங்கள்
   (பஃறொடை வெண்பா)
   தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
   உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
   வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
   மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
   ஐயுறாது ஆடுக நீர்.

011.பழைமையோர் கண்ட முறைமை
   (இன்னிசை வெண்பா)
   உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
   உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
   ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
   முந்தையோர் கண்ட முறை.

012.செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
   பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
   குறையெனினும் கொள்ளார் இரந்து.

013.செய்யத் தகாதவை
    (இன்னிசை வெண்பா)
    நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
   கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
   நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
   நீர்தொடார் நோக்கார் புலை.

014.நீராடும் முறை
   (இன்னிசை வெண்பா)
   நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
   நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
   காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
   ஆய்ந்த அறிவி னவர்.

015.உடலைப்போல் போற்றத் தக்கவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
   தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
   ஐம்பூதம் அன்றே கெடும்.

016.யாவரும் கூறிய நெறி
   (சவலை வெண்பா)
   அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
   நிகரில் குரவர் இவர்இவரைத்
   தேவரைப் போலத் தொழுக என்பதே
   யாவரும் கண்ட நெறி.

017.நல்லறிவாளர் செயல்
   (இன்னிசை வெண்பா)
   குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
   குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
   மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
   நல்லறி வாளர் துணிவு.

018.உணவு உண்ணும் முறைமை
   (இன்னிசை வெண்பா)
   நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
   உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
   உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
   கொண்டார் அரக்கர் குறித்து.

019.கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
   ஈரம் புலராமை ஏறற்க என்பதே
   பேரறி வாளர் துணிவு.

020.உண்ணும் விதம்
   (இன்னிசை வெண்பா)
   உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
   தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
   பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
   உண்க உகாஅமை நன்கு.

021.ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
   இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
   ஒழுக்கம் பிழையா தவர்.

022.பிற திசையும் நல்ல
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
   முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
   முகட்டு வழிகட்டில் பாடு.

023.உண்ணக்கூடாத முறைகள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
   சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
   இறந்தொன்றும் தின்னற்க நின்று.

024.பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
   என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
   பெரியார்தம் பாலிருந்தக் கால்.

025.கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை 
   உண்ணும் முறைமை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
   மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
   துய்க்க முறைவகையால் ஊண்.

026.உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
   (இன்னிசை வெண்பா)
   முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
   உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
   அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
   பண்பினால் நீக்கல் கலம்.

027.உண்டபின் செய்ய வேண்டியவை
   (பஃறொடை வெண்பா)
   இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
   அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
   முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
   ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
   மிக்கவர் கண்ட நெறி.

028.நீர் குடிக்கும் முறை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
   கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
   சொறியார் உடம்பு மடுத்து.

029.மாலையில் செய்யக் கூடியவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   அந்திப் பொழுது கிடவார் நடவாரே
   உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
   அல்குண்டு அடங்கல் வழி.

030.உறங்கும் முறை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
   வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
   உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

031.இடையில் செல்லாமை முதலியன
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
   மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
   உடன்செல்லல் உள்ளம் உவந்து.

032.மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
   (இன்னிசை வெண்பா)
   புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
   தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
   ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
   சோரார் உணர்வுடை யார்.

033.மலம் சிறுநீர் கழிக்கும் முறை
   (குறள் வெண்பா)
   பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
   பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

034.மலம், சிறுநீர் கழிக்கும் திசை
   (இன்னிசை வெண்பா)
   பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
   அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
   இந்திர தானம் பெறினும் இகழாரே
   தந்திரத்து வாழ்துமென் பார்.

035.வாய் அலம்பாத இடங்கள்
   (இன்னிசை வெண்பா)
   நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
   வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
   வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
   பெய்பூச்சுச் சீரா தெனின். 

036.ஒழுக்க மற்றவை
   (பஃறொடை வெண்பா)
   சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
   இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
   படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
   பலரிடை ஆடை உதிராரே என்றும்
   கடனறி காட்சி யவர்.

037.நரகத்துக்குச் செலுத்துவன
   (நேரிசை வெண்பா)
   பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
   அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
   எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
  செல்வழி உய்த்திடுத லால்.

038.எண்ணக்கூடாதவை
   (இன்னிசை வெண்பா)
   பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
   ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
   ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
   தெய்வமும் செற்று விடும்.

039.தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
   அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
   ஊட்டினமை கண்டுண்க ஊண்.

040.சான்றோர் இயல்பு
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
   இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
   இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.

041.சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
   புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
   நுண்ணிய நூலறிவி னார்.

042.மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
   ஈராறு நாளும் இகவற்க என்பதே
   பேரறி வாளர் துணிவு.

043.உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
   (இன்னிசை வெண்பா)
   உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
   மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
   அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
   ஒட்டார் உடனுறைவின் கண்.

044.நாழி முதலியவற்றை வைக்கும் முறை
   (இன்னிசை வெண்பா)
   நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
   கோடி கடையுள் விரியார் கடைத்தலை
   ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
   தந்தலைக்கண் நில்லா விடல்.

045.பந்தலில் வைக்கத் தகாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
   கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
   பரப்பற்க பந்த ரகத்து.

046.வீட்டைப் பேணும் முறைமை
   (பஃறொடை வெண்பா)
   காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
   ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
   நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
   இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
   நல்லது உறல்வேண்டு வார்.

047.நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
   (இன்னிசை வெண்பா)
   அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
   அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
   நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
   இலங்குநூல் ஓதாத நாள்.

048.அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
   ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
   பெய்க விருந்திற்கும் கூழ்.

049.நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
   நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
   குடிமைக்கும் தக்க செயல்.

050.கேள்வியுடையவர் செயல்
   (இன்னிசை வெண்பா)
   பழியார் இழியார் பலருள் உறங்கார்
   இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
   இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
   தாங்கருங் கேள்வி யவர்.

051.தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
   நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
   முன்னொளியும் பின்னொளியும் அற்று.

052.தளராத உள்ளத்தவர் செயல்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
   வசையும் புறனும் உரையாரே என்றும்
   அசையாத உள்ளத் தவர்.

053.ஒழுக்கமுடையவர் செய்யாதவை
   (இன்னிசை வெண்பா)
   தெறியொடு கல்லேறு வீளை விளியே
   விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
   உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
   பயிற்றார் நெறிப்பட் டவர்.

054.விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
   கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
   ஊணொடு செய்யும் சிறப்பு.

055.அறிஞர் விரும்பாத இடங்கள்
   (பஃறொடை வெண்பா)
   கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
   நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
   குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
   நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
   நீர்க்கரையும் நீடு நிலை.

056.தவிர்வன சில
   (பஃறொடை வெண்பா)
   முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
   துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
   கானம் தமியர் இயங்கார் துளியஃகி
   நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
   தொல்வரவின் தீர்ந்த தொழில்.

057.நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
   (இன்னிசை வெண்பா)
   பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
   ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
   தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
   நோயின்மை வேண்டு பவர்.

058.ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
   (இன்னிசை வெண்பா)
   எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
   எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
   எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
   கொள்வர் குரவர் வலம்.

059.சில தீய ஒழுக்கங்கள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
   அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
   படக்காயார் தம்மேற் குறித்து.

060.சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
   ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
   ஓராறு செல்லுமிடத்து.

061.நூல்முறை உணர்ந்தவர் துணிவு
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
   மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
   நூன்முறை யாளர் துணிவு.

062.சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
   ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
   சாரத்தால் சொல்லிய மூன்று.

063.கற்றவர் கண்ட நெறி
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
   மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
   திறங்கண்டார் கண்ட நெறி.

064.வாழக்கடவர் எனப்படுவர்
   (இன்னிசை வெண்பா)
   பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
   மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
   ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
   போற்றி யெனப்படு வார்.

065.தனித்திருக்கக் கூடாதவர்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
   சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
   தாங்கற்கு அரிதஆக லான்.

066.மன்னருடன் பழகும் முறை
   (இன்னிசை வெண்பா)
   கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
   கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
   இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
   கடைபோக வாழ்துமென் பார்.

067.குற்றம் ஆவன
   (இன்னிசை வெண்பா)
   தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
   உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
   பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
   வடுக்குற்ற மாகி விடும்.

068.நல்ல நெறி
   (இன்னிசை வெண்பா)
   பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
   சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
   பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
   அளவளா வில்லா இடத்து.

069.மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
   (இன்னிசை வெண்பா)
   முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
   தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
   இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
  காக்கைவெள் என்னும் எனின்.

070.மன்னன் முன் செய்யத் தகாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
   வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
   புணரார் பெரியா ரகத்து.

071.மன்னன் முன் சொல்லக் கூடாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
   குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
   பாரித்துப் பல்காற் பயின்று.

072.வணங்கக்கூடாத இடங்கள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
   வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
   நேர்பெரியார் செல்லு மிடத்து.

073.மன்னர் முன் செய்யத் தகாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
   இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
   அசையாது நிற்கும் பழி.

074.ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
   (இன்னிசை வெண்பா)
   நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
   இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
   சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
   வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

075.சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
   எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
   கொள்ளார் பெரியார் அகத்து.

076.சொல்லும் முறைமை
   (இன்னிசை வெண்பா)
   விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
   பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
   சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
   சொல்லுக செவ்வி அறிந்து.

077.நல்ல குலப்பெண்டிர் இயல்பு
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
   எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
   தம்மேனி அல்லால் பிற.

078.மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
   சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
   தேர்வார்போல் நிற்க திரிந்து.

079.பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
   (நேரிசை வெண்பா)
   துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
   இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
   செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
   திறப்பட்டார் கண்ணே உள.

080.சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
   (நேரிசை வெண்பா)
   தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
   உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
   என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
   நன்கறிவார் கூறார் முறை.

081.ஆன்றோர் செய்யாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
   இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
   தொழிற்குரிவர் அல்லா தவர்.

082.மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
   (இன்னிசை வெண்பா)
   வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
   ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
   மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
   உவப்பன வேறாய் விடும்.

083.கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
   (இன்னிசை வெண்பா)
   நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
   உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
   அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
   கடைபோக வாழ்துமென் பார்.

084.பழகியவை என இகழத் தகாதவை
   (இன்னிசை வெண்பா)
   அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
   முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
   இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
   இகழின் இழுக்கந் தரும்.

085.செல்வம் கெடும் வழி
   (நேரிசை வெண்பா)
   அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
   இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
   மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
   மன்னிய செல்வம் கெடும்.

086.பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
   கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
   உண்டது கேளார் விடல்.

087.கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
   மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
   நில்லார்தாம் கட்டின் மிசை.

088.பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
   அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
   திறத்துளி வாழ்தும்என் பார்.

089.கிடைக்காதவற்றை விரும்பாமை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
   கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
   மெய்யாய காட்சி யவர்.

090.தலையில் சூடிய மோத்தல்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
   பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
   புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.

091.பழியாவன
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
   காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
   மூத்த உளஆக லான்.

092.அந்தணரின் சொல்லைக் கேட்க
   (நேரிசை வெண்பா)
   தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
   புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
   அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
   என்றும் பிழைப்ப தில்லை.

093.சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
   என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
   நின்று உழியும் செல்லார் விடல்.

094.ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
   (இன்னிசை வெண்பா)
   கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
   மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
   கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
   ஐயமில் காட்சி யவர்.

095.பொன்னைப் போல் காக்கத் தக்கவை
   (இன்னிசை வெண்பா)
   தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
   உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
   பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
   மன்னிய ஏதம் தரும்.

096.எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
   (இன்னிசை வெண்பா)
   நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
   தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
   அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
   எப்பெற்றி யானும் படும்.

097.சான்றோர் முன் சொல்லும் முறை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
   பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
  கண்ணுள்ளே நோக்கி யுரை.

098.புகக் கூடாத இடங்கள்
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   சூதர் கழகம் அரவம் அறாக்களம்
   பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
   ஏதம் பலவும் தரும்.

099.அறிவினர் செய்யாதவை
   (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
   உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
   நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
   இல்லம் புகாஅர் விடல்.

100.ஒழுக்கத்தினின்று விலகியவர்
   (பஃறொடை வெண்பா)
   அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
   இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
   அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
   ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
   ஆசாரம் வீடுபெற் றார்.